
தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ள ஸ்பெயின் நாட்டிற்கு வரும் அமெரிக்க ஜனாதிபதி மாநாட்டில் உரையாற்றும் போது சுட்டு கொல்லப்படுகிறார். Vantage Point திரைப்படம் இவ்வாறு தொடங்கி கொலைக்கு காரணமானவர்களை கண்டு பிடிக்கும் சாதாரண action thriller திரைப்படம். வித்தியாசமான திரைக்கதை,மிக சிறப்பான எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு மூலம் இந்த திரைப்படம் மிகுந்த சுவாரஸ்யமானதாக ஆக்கப்பட்டுள்ளது.
ரஷோமான்,அந்த நாள்,விருமாண்டி போன்ற சீரியஸ் திரைப்படங்களில் இது போன்ற உத்தியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் வேறு வேறு கதாபாத்திரங்களே ஒரே நிகழ்வை வெவ்வேறு கோணங்களில் விவரிப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும். இதில் கதாபாத்திரங்கள் மூலம் அந்த நிகழ்வை விவரிக்காமல் கதையின் போக்கிலேயே சென்று கதாபாத்திரங்கள் பார்வையில் கோணங்கள் விவரிக்கப்படுகின்றன.
நண்பகல் 12 மணிக்கு கதை துவங்குகிறது. தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ள ஸ்பெயின் வந்துள்ள அமெரிக்கா ஜனாதிபதி உரையாற்ற கூட்டம் நடக்கும் இடத்திற்கு வருகிறார். மாநாட்டை ஒளிபரப்ப வந்துள்ள தனியார் தொலைகாட்சி நிறுவனத்தின் செய்தி தயாரிப்பாளர் தனது குழுவின் மூலம் அதை ஒளிபரப்புகிறார்.தொலைக்காட்சி கேமரா கூட்டத்தை படம் பிடிக்கிறது. 6 மாதங்களுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதியை கொல்ல நடந்த முயற்சியில் குண்டடி பட்டு ஜனாதிபதியை காப்பாற்றிய அவர் பாதுகாவலர் தாமஸ்(Dennis Quaid)உடல் நலம் தேறி மீண்டும் பணியில் இருப்பது தெரிகிறது. நகரத்து மேயர் பேசி முடித்தபின் பேச மேடை வரும் ஜனாதிபதி இரு முறை சுடப்பட்டு கொல்லப்படுகிறார். மக்கள் சிதறி ஓடுகின்றனர். தூரத்தில் ஒரு வெடிகுண்டு சத்தம் கேட்கிறது. சில நிமிடங்களில் மேடையிலும் ஒரு குண்டு வெடிக்கிறது. நேரம் 12.23.திரை இருள்கிறது.முதல் கோணம் முடிவடைந்தது.
மீண்டும் கதை நண்பகல் 12 மணிக்கு தொடங்குகிறது மற்றொரு கோணத்தில்.ஜனாதிபதியின் பாதுகாவலர் தாமஸ்(Dennis Quaid) சக அலுவலர் கென்ட்(Matthew fox) உடன் பாதுகாப்பு பணியில் இருக்கிறார். நகரத்து மேயர் பேசிக்கொண்டிருக்கும் போது எதிர் புற கட்டிட ஜன்னல் திரைசீலை அசைவதை கவனிக்கிறார். விசாரிக்கும் போது அது மின் விசிறியால் அசைந்ததென்று அறிகிறார். மக்கள் கூட்டத்தையும் அந்த திரைசீலை அசைவதையும் ஒரு நபர் படம் பிடிப்பதையும் கவனிக்கிறார். சில நொடிகளில் ஜனாதிபதி சுடப்படுகிறார். மக்கள் கலைந்து ஓடுகின்றனர். திடீரென்று ஒருவன் மேடையை நோக்கி ஓடியதால் போலீசால் கைது செய்யப்படுகிறான். தூரத்தில் குண்டு வெடிக்கிறது. கூட்டத்தில் படம் பிடித்து கொண்டிருந்த நபரின் வீடியோ கேமராவை வாங்கி அதில் படம் பிடித்ததை ஆராய்கிறார். எதிர் புற கட்டிடத்தில் யாரையோ பார்த்தாக நம்புகிறார். வீடியோ கேமராவில் படம் பிடிக்கப்பட்டதை பார்க்கும் போது அதிர்ச்சி அடைந்து அனைவரையும் ஓட சொல்கிறார். அதற்குள் மேடையில் குண்டு வெடிக்கிறது. லேசான காயங்களுடன் அவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் படப்பிடிப்பு வாகனத்தில் நுழைந்து இதுவரை நடந்த ஒளிபரப்பை காண்பிக்க சொல்கிறார். அதை பார்த்து ஒரு கணத்தில் அதிர்ச்சி அடைகிறார். திரை இருண்டு அடுத்த கோணம் முடிகிறது.
மீண்டும் நண்பகல் 12 மணிக்கு கதை துவங்குகிறது.இந்த கோணத்தில் என்ரிக் என்பவன்( ஜனாதிபதி சுடப்பட்டவுடன் மேடையை நோக்கி ஓடியவன்) தனது காதலி கூட்டத்தில் புதிய நபர் ஒருவனுடன் பேசி கொண்டிருப்பதை பார்த்து அவளிடம் வினவுகிறான். காதலி தான் கூறிய கைப்பையை என்ரிக் கொண்டுவந்ததை உறுதிபடுத்திக்கொண்டு அதை வாங்கி கொள்கிறாள். ஜனாதிபதி சுடப்பட்டவுடன் நகரத்து மேயரை காப்பாற்ற மேடையை நோக்கி ஓடுகிறான். இடையில் அமெரிக்க போலீசால் பிடிக்கப்படுகிறான்.தூரத்தில் குண்டு வெடிக்கிறது.தானொரு போலீஸ் என்றும் மேயரை காப்பது தனது வேலை என்று கூறியும் நம்ப மறுக்கிறார்கள். சிதறி ஓடும் கூட்டத்தில் எதையோ பார்த்து போலீசின் பிடியில் இருந்து விடுவித்து கொண்டு ஓடுகிறான்.மேடையில் குண்டு வெடிக்கிறது. தப்பித்து ஓடும் என்ரிக்கை தொடர்ந்து போலீஸ் துரத்த அவன் ஓடுகிறான். இடையில் ஒரு காரின் மேல் இடித்து நிற்கிறான். காருக்குள் உள்ளவர்களிடம் தான் உயிருடன் உள்ளது ஆச்சரியமாக இருக்கிறதா என்று கேட்கிறான். உடன் அமெரிக்கா போலீசால் சுடப்பட்டு இறக்கிறான். இந்த கோணம் முடிகிறது.
நண்பகல் 12 மணி . கூட்டத்தில் படம் பிடித்து கொண்டிருந்த நபர் ஹோவார்ட் (Forest Whitaker) ஒரு அமெரிக்கா சுற்றுலா பயணி. அங்கிருந்த ஒரு நபருடன் சிறிது நேரம் பேசிவிட்டு திரும்பும்போது தாயுடன் கூட்டத்தில் நடந்து செல்லும் ஆனா என்ற சிறுமியின் மேல் இடித்து விடுகிறார். அவள் கையிலிருந்த ஐஸ்கிரீம் தரையில் விழுகிறது. மன்னிப்பு கேட்கிறார். நகரத்து மேயர் பேசும் போது தாமஸ் எதிர் புற கட்டிடத்தை உற்று கவனிப்பதை பார்த்து அதை படம் பிடிக்கிறார். ஜனாதிபதி சுடப்படவுடன் தனது வீடியோ காமெராவை தாமஸ் க்கு தந்து உதவுகிறார். தூரத்தில் குண்டு வெடிக்கிறது. சிதறி ஓடிய கூட்டத்தில் சிறுமி ஆனா தன் தாயை காணமல் அழுகிறாள். அவளை ஒரு போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைத்து குண்டு வெடித்த பின் என்ரிக் ஓடிக்கொண்டிருக்கும் போது அவனை பின் தொடர்ந்து ஓடுகிறார். என்ரிக் போலீசால் சுடப்பட்டு இறந்த பின் திரும்பும்போது சாலையில் மீண்டும் ஆனா தன் தாயை பார்த்து விட்டு சாலையை கடந்து தாயிடம் ஓடுகிறாள். சாலையை கடக்கும்போது எதிரில் வரும் ஆம்புலன்ஸ் அவளை இடிக்கும் அளவு நெருங்கி வருகிறது. அவளை காப்பாற்ற ஹோவார்ட் ஓடுகிறார்.கோணம் முடிகிறது.
அடுத்த கோணத்தில் கதையின் சஸ்பென்ஸ் வெளிப்படுகிறது. தொடர்ந்து விவரிக்கப்பட்டு அனைத்து கோணங்களின் முடிவில் எல்லா சஸ்பென்ஸ்களும் விளக்கப்படுகிறது. ஒவ்வொரு கோணத்திலும் கதை சிறிதளவு நீட்சி அடைந்து மர்மம் விலகுகிறது. Vantage Point என்றால் அனைத்து நிகழ்வுகளையும் ஒரு வசதியான இடத்தில் இருந்து பார்ப்பது என அர்த்தமாகிறது.இப்படம் "குறி வச்சாச்சு" என தமிழிலும் வெளி வருகிறது.
ஒன்றரை மணி நேரம் ஓடும் இப்படம் ஆரம்பம் முதல் கடைசி வரை புயல் வேகத்தில் பயணிக்கிறது.கடைசியில் வரும் கார் துரத்தல் கண்டிப்பாக எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவிற்க்காக பேசப்படும்.படம் நெடுக பார்வையாளர்களை இருக்கை நுனியில் வைத்திருக்க செய்யப்பட்ட முயற்சி வெற்றியடைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதிக்கு...குறி வச்சாச்சு
Labels: சினிமா
Subscribe to:
Post Comments (Atom)

13 comments:
விமர்சனமும் விறுவிறுப்பாக இருக்கு... ;)
படத்தை பார்க்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள்... நன்றி... :)
தங்கள் வருகைக்கு நன்றி நாதஸ்.
மிகவும் சிறப்பான முறையில் "குறி வச்சாச்சு" எழுதி உள்ளீர்கள்.பாதி திரைப்படம் பார்த்துவிட்டேன் மீதி திரையில் பார்த்துக்கொள்கிறேன் பிரேம்ஜி !
வருகைக்கு நன்றி திலக்.
நல்ல எழுதி இருக்கீங்க. கண்டிப்பா படம் பாக்கறேன்.
Rockin'review.Seems to be an intresting film.
நன்றி அறிவழகன்.
Thanks for your visit Sundar.
நிஜமாகவே குறிவச்சாச்சு
வருகைக்கு நன்றி அனானி.
படம் பார்த்தேன். விறுவிறுப்பாக இருந்தது உங்கள் விமர்சனம் போலவே.
தங்களின் உரை நடை படம் பர்ர்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது
நன்றி திரு.கோபி அவர்களே.
Post a Comment