கூகிள் வலைத்தளமும் இருளில் மூழ்கியது - உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு



உலகம் வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட 2007 ம் ஆண்டு World Wildlife Fund மூலம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வு தான் உலக ஒரு மணி நேரம் (Earth Hour) எனப்படுகிறது. இதன் படி இந்த வருடம் மார்ச் மாதம் 29 ம் தேதி இரவு 8 மணி முதல் 9 மணி வரை வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது(அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து).கூகிள் வலைத்தளமும் இந்நிகழ்வை வலியுறுத்த இன்று அதன் முகப்பு பக்கத்தை முழுவதும் இருண்டதாக காட்டுகிறது.

உலக வெப்பமயமாதல் தற்போது உலகின் முக்கிய அச்சுறுத்தும் காரணியாக இருக்கிறது. தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியிடும் புகை, அசுத்தங்களால் காற்று மண்டலத்தில் வெப்பநிலை அதிகரிக்கிறது. ஆகவே துருவங்களில் உள்ள பெரும் பனிப்பாறைகள் உருகுகின்றன. கடல் நீர் மட்டம் அதிகரிக்கிறது.

மின்சாரம் தயாரிக்க உலகம் முழுவதும் பெரும்பாலும் நிலக்கரி உபயோகிக்கப்படுகிறது.ஒவ்வொரு மின்சார நிலையங்களிலும் இதற்காக பயன்படுத்தப்படும் நிலக்கரி மின் உற்பத்தி முடிந்தவுடன் கரியாக மாறி காற்று மண்டலத்தில் சேர்கிறது.

தமக்கென்று பாதிப்பு வரும்வரை, மற்றவருக்கு ஏற்படும் பாதிப்புக்களை நாம் அலட்சியம் செய்து விடுகின்றோம். சுற்றுச் சூழல் மாசடைவது, வெளிப் பார்வைக்கு, வெட்ட வெளிச்சமாகத் தெரிவதாகவோ, அல்லது குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுவதாகவோ இல்லாமல் போவதாலும், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அறியாமலே நம்மை பாதிப்பதாலும், அதற்கு தரப் படவேண்டிய முக்கியத்துவம் தரப்படாமலே போய்க் கொண்டிருக்கின்றது.

Al Gore எழுதிய " An inconvinient Truth" (ஒரு சங்கடமான உண்மை) என்னும் புத்தகத்தில் உலக வெப்பமயமாதலுக்கு உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்கா மட்டும் 30 சதவிகிதம் காரணமாக இருப்பதை குறிப்பிடுகிறார். ஐரோப்பா, ரஷ்யா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளும் தன் பங்கிற்கு சுற்று சூழலை மாசுபடுத்துகின்றன. இந்தியாவிலும் ஒவ்வொரு நாளும் 25000 க்கு மேற்பட்ட கார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலைக்கு வருகின்றன.

சென்ற ஆண்டு சிட்னி நகரில் ஒரு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டபோது நகரின் 22 லட்சம் மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு 10 சதவிகிதம் மின் சக்தியை மிச்சப்படுத்தினர். மின் சக்தி தேவை குறையும் போது மின் நிலையங்களில் நிலக்கரி உபயோகமும் குறைகிறது. உலகம் முழுவதும் இம்முறை மக்கள் பங்கு பெற்றால் அதிக அளவு மிச்சப்படுத்தலாம். இது ஒரு சிறிய முயற்சியே. இதன் பின்னால் மறைமுக நன்மைகள் அதிகமே.

இந்த வருடம் 35 நாடுகளில் 370 நகரங்களில் பூமி நேரம் நிகழ்வு கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக ஏற்படுத்திய வலை தளத்தில் Earth Hour இதுவரை இரண்டு லட்சத்து எழுபத்து மூன்றாயிரம் மக்கள் இணைந்துள்ளனர். நீங்களும் இந்நிகழ்வில் இணைந்து கொள்ளுங்கள்.அடுத்த தலைமுறையினருக்கு பாதுகாப்பான உலகத்தை ஒப்படைப்போம்.

குறிப்பு : கூகிள் இது போன்று உலக நிகழ்வுகளை சுவாரஸ்யமாக தன் தளத்தில் காண்பிப்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
கூகிள் லோகோக்கள் - சில சுவாரஸ்யமான தகவல்கள்

3 comments:

தஞ்சாவூரான் said...

பிரேம்,
மிகத் தேவையான பதிவு!

//Al Gore எழுதிய " An inconvinient Truth" (ஒரு சங்கடமான உண்மை) என்னும் புத்தகத்தில் உலக வெப்பமயமாதலுக்கு உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்கா மட்டும் 30 சதவிகிதம் காரணமாக இருப்பதை குறிப்பிடுகிறார்.//

நானும் இந்தப் புத்தகத்தைப் படித்தேன். மிகவும் அதிர்ச்சியான விஷயங்கள் இருக்கு இதில்! இருந்தாலும், பெரியண்ணன் கியோட்டோ புரோட்டோகால்ல கைநாட்டு வைக்க மாட்டேன்னு அடம் புடிச்சிகிட்டு இருக்காரு. எல்லாம் அரசியல்தான் :(

பிரேம்ஜி said...

வருகைக்கு மிக்க நன்றி திரு.தஞ்சா வூரான். க்யோடோ ப்ரொடோகால் 1997 இல் ஆரம்பிக்கப்பட்டு 2005 இல் முழு வீச்சில் பல நாடுகள் நடைமுறைப்படுத்த முன் வந்தும் அமெரிக்கா இன்னும் இதை நடைமுறைபடுத்தவில்லை. இந்த ப்ரோடோகாலே 2012 இல் காலாவதியாகிறது. சென்ற வருடம் நடந்த ஒரு சர்வதேச மாநாட்டில் வேறு ஒரு ப்ரொடோகால், க்யோடோ ப்ரோடோகாலை தொடர்ந்து, முன் மொழியப்பட்டுள்ளது.

திலக் Raj said...

எந்த ப்ரோடோகாலாக இருந்தாலும் அமெரிக்கா பின் பற்றபோவதில்லை