இரு வாரங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து சிகாகோ செல்லும் போது நடுவில் சிறிது நேரம் மும்பை விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருந்தது.தாக்குதல்களுக்கு பிறகு ஒரு அமைதியான காலை நேரத்தில் மும்பை விமான நிலையம்.

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இருந்து விட்டு சிகாகோ வந்தடைந்தபோது விமான நிலையத்தில் வெப்பநிலை உறைபனிக்கு கீழே மைனஸ் - 10 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.அங்கிருந்து 200 கி மீ தொலைவில் இருக்கும் எங்கள் நகரத்தை அடைந்தபொழுது வெப்பநிலை மைனஸ் -15 டிகிரி செல்சியஸ்.அடுத்த நாள் பனிப்புயல் அடிக்கபோவதாக வானிலை அறிவிப்பு சொன்னது.நியூ ஜெர்சி மாகாணத்தில் பலமுறை பனித்துகள் வீழ்வை பார்த்திருந்தாலும்,வேலை மாற்றல் காரணமாய் இல்லனாய் மாகாணத்திற்கு வந்த பிறகு இந்த கொடுமையான பனிப்புயல் (Ice Storm)பார்ப்பது இதுவே முதல் தடவை.

மிக மிக குளிர்ந்த காற்று பரப்பிற்கு மேலே உள்ள வெம்மையான மேகம் மழை பொழியும் போது மழை துளிகள் அதி குளிர்விக்கப் படுகின்றன(Super Cooling).அதி குளிர்விப்பு என்றால் உறைபனிக்கு கீழான வெப்ப நிலையிலும் திரவத்தை(நீர்) கெட்டியாக்காமல் திரவ நிலையிலேயே வைத்திருப்பது.அப்படி அதி குளிர்விக்கப்பட்ட பனி மழை துளிகள் பூமியை வந்தடைந்து தரையின் மீது,பொருட்களின் மீது விழும்போது அப்படியே பனிக்கட்டிகளாக உறைந்து போகும்.இதுவே பனிப்புயல் எனப்படுகிறது.இப்படி பனி மழை துளிகள் பனிக்கட்டிகளாக உறைந்து சாலைகள்,மரங்கள்,மின் கம்பங்கள் அனைத்தும் பனிக்கட்டி அடுக்குகளால் மூடப்பட்டுவிடும்.
வாகனங்கள் செல்ல முடியாமல்,மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே தரைபரப்பு கடுமையாக வழுக்கி விடும்.பனிக்கட்டி அடுக்குகளால் போர்த்தப்பட்ட மரங்கள் அவற்றின் பாரம் தாங்காமல் உடைந்து வீழும்.மின் கம்பங்கள் சேதமாகும்.இவற்றோடு குளிர் காற்று வீசும் போது வெப்பநிலை மிக குறைந்து போகும்.பனிப்புயல் மிக கடுமையானது.
இரண்டு நாட்கள் நீடித்தது.சற்றே சிரமப்பட்டு பனிப்புயலின் போது,அதற்கு பின்னர் சில ஒளிப்படங்களை எடுத்தேன்.அடுத்த நாள் காலை மெதுவாக வீட்டிலிருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்தேன்.மிக மிக கடுமையான குளிர் முகத்தில் அறைந்தது.உள்ளே வந்து
Weather.com வெப்பநிலை பார்த்தேன்.உறைபனிக்கு கீழே மைனஸ் - 20 டிகிரி செல்சியஸ்.என் முகத்தில் அறைந்த காற்றின் வெப்பநிலை மைனஸ் -29 டிகிரி செல்சியஸ்.நண்பர் ஹனுமந்தராவ் சொன்னார் "இல்லனாய் மாகாணத்திற்கு வருக.அடுத்த வாரம் தான் குளிர்காலமே ஆரம்பிக்கப் போகிறது"




பனிப்புயல் முடிந்து சூரியன் தோன்றிய போது

மரங்களின் மேல் பனிக்கட்டி அடுக்குகள்


read more "சென்னை-சிகாகோ,மும்பை விமான நிலையம் மற்றும் உறைய வைத்த பனிப்புயல்"